சிறுநீரக செயலிழப்பு
- முகப்பு
- >
- மௌனக் கொலையாளியை வெல்ல 8 உத்திகள்!
- >
- கொழுப்புகள் – நல்லதா கெட்டதா?
Facebook இல் எங்களைப் பின்தொடரவும்
Instagram இல் எங்களைப் பின்தொடரவும்
YouTube இல் எங்களைப் பின்தொடரவும்
TikTok இல் எங்களைப் பின்தொடரவும்
கொழுப்புகள் – நல்லதா கெட்டதா?
எல்லா கொழுப்புகளும் ஒரேவிதமாக உண்டாவதில்லை என ஆராய்ச்சி காட்டுகிறது. சில கொழுப்புகள் உங்களுக்கு நல்லது, சில நல்லதல்ல. தீங்குவிளைவிக்கும் கொழுப்புகளுக்குப் பதிலாக ஆரோக்கியமளிக்கும் கொழுப்புகளை உணவில் எப்படிச் சேர்த்துக்கொள்வது எனக் கண்டுபிடியுங்கள்.
உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய கொழுப்புகள் தாவரங்களிலும் இறைச்சிகளிலும் உள்ளன. கொழுப்பும் ஒரு அத்தியாவசியமான சத்துதான். எனவே, உணவில் கொழுப்பை அறவே தவிர்ப்பது நல்லதல்ல. அது நம் மென்மையான உள்ளுறுப்புகளை பொதிந்து காக்கிறது, கொழுப்பு கரைக்கிற விட்டமின்களை உறிஞ்சிக் கொள்கிறது, நம் உடலைக் கதகதப்பாக வைக்கத் தேவையான வெப்பத்தைத் தருகிறது.
டிரைக்ளிசரைடுகள்தான் உங்கள் உடலிலுள்ள மிகப் பொதுவான வகை கொழுப்பு. கார்போஹைட்ரேடு (உதாரணமாக, ரீபெண்ட் சர்க்கரை பானங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகள்), கொழுப்பு, மதுபானம் போன்றவற்றை அதிகளவு உட்கொள்ளும்போது இவை நம் உடலில் உற்பத்தியாகின்றன. டிரைக்ளிசரைடு உயர்வாக இருந்தால் இருதய நோய் வரும் ஆபத்து அதிகமாகலாம்.
கொலஸ்டிரால் என்பது கொழுப்பின் வகை அல்ல. அது நம் உடலில் இயற்கையாக உற்பத்தியாகிற மெழுகு போன்ற பொருள், நம் உணவு முறையாலும் அது வருகிறது.
கொலஸ்டிராலில் இரண்டு வகைகள் உள்ளன:
- குறை அடர்த்தி கொழுப்புப் புரதம்(Low-density lipoprotein) (LDL) கொலஸ்டிரால் பொதுவாக கெட்ட கொழுப்பாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், தமனி்களிலுள்ள உட்புற சுவற்றில் இது படிப்படியாகத் தங்கிவிடும். இதனால் தமனிகள் குறுகி இறுகிவிடுகின்றன. தமனிகளுக்குள்ளே செல்லும் இரத்த ஓட்டமும் குறைகிறது. எனவே, நம் உணவில் LDL கொலஸ்டிரால் அதிகமாக இருந்தால் இருதய நோயும் சிறுநீரக நோயும் வரும் ஆபத்தும் அதிகம்.
- நிறை அடர்த்தி கொழுப்புப் புரதம் (High-density lipoprotein) (HDL) கொலஸ்டிரால் பொதுவாக நல்ல கொலஸ்டிராலாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், தமனிகளில் உள்ள அதிக கொலஸ்டிராலை இது அகற்றுகிறது, இரத்தக் குழாய்களில் கொலஸ்டிரால் தங்கிவிடுவதைத் தவிர்க்கவும் உதவுகிறது. ஆகவே, இது இருதய நோய் வராமல் உங்களைக் காக்கிறது.
உங்கள் கொழுப்புகளை அறிந்திருங்கள்
மோனோ மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள்
- டிரைக்ளிசரைடு மற்றும் LDL கொலஸ்டிராலை குறைக்கிறது
- இருதய ஆரோக்கியத்துக்கு மிதமான அளவில் நல்லது
மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ள சில உணவுகள்:
- அவகோடா பழங்கள்
- பாதாம், முந்திரி மற்றும் நிலக்கடலை
- தாவரங்களிலிருந்து அல்லது கடுகு, ஆலிவ், கடலை, சோயாபீன் போன்ற விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் சமையல் எண்ணெய்கள் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்கள்.
பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ள சில உணவுகள்:
- மீன்
- ஆளிவிதை மற்றும் சியா விதை
- சோயாபீன், சூரியகாந்தி, குசம்பப்பூ மற்றும் கடுகு எண்ணெய்
- பைன் நட்ஸ், வால்நட்ஸ் மற்றும் பிரேஸில் நட்ஸ்
நிறைவுற்ற கொழுப்புகள்
- LDL கொலஸ்டிராலை அதிகரிக்கிறது
- இருதய நோய் வருவதற்கான ஆபத்து அதிகம்
உதாரணங்கள்:
- பறவை இறைச்சியின் தோல் மற்றும் கொழுப்பு
- அடைக்கப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் (ஸாசேஜ் /ஸலாமி/லன்ஜியான் இறைச்சி/பர்கர் பேட்டி)
- அதிக க்ரீமுள்ள பால் மற்றும் பால் பொருட்கள்
- தேங்காய் பால்/எண்ணெய் மற்றும் தேங்காயில் செய்யப்படும் பொருட்கள்
- வெண்ணெய், பாமாயில் பனை கர்னல் எண்ணெய், கோகோ வெண்ணெய், நெய்
டிரான்ஸ் கொழுப்புகள்
- LDL கொலஸ்டிராலை அதிகரிக்கிறது
- இருதய நோய் வருவதற்கான ஆபத்து அதிகம்
உதாரணங்கள்:
- உருளைக் கிழங்கு சிப்ஸ்
- பேஸ்ட்ரீஸ், குக்கீஸ் மற்றும் கேக்ஸ்
- தாவர வெண்ணெய் மற்றும் மிருகக் கொழுப்புகள்
இரத்தப் பரிசோதனையில் உங்கள் லிபிட் ப்ரோபைலை அறிந்துகொள்ளுங்கள்:
லிபிட் ப்ரோபைல் | விரும்பத்தக்க அளவு |
மொத்த கொலஸ்டிரால்: mmol/L | 5.2mmol/L-க்கும் குறைவாக அல்லது 200mg/dl |
டிரைக்ளிசரைடு: mmol/L | 1.7mmol/L-க்கும் குறைவாக அல்லது 150mg/dl |
LDL (கெட்ட) கொலஸ்டிரால்: mmol/L | 3.2mmol/L-க்கும் குறைவாக அல்லது 130mg/dl |
HDL (நல்ல) கொலஸ்டிரால்: mmol/L | 1.2mmol/L -க்கும் அதிகமாக அல்லது 40mg/dl |
குறிப்பு: உங்களுக்கு LDL மற்றும் டிரைக்ளிசரைடு அளவுகள் அதிகமாக இருந்தால், நிறைவுற்ற கொழுப்பு, டிரான்ஸ் கொழுப்பு மற்றும் கொலஸ்டிரால் அதிகமாக உள்ள உணவுகளைக் குறைத்துவிடுவது நல்லது
கொலஸ்டிரால் அளவை கையாள சில டிப்ஸ்
வீட்டில்
- சன்னமாக வெட்டப்பட்ட இறைச்சித் துண்டுகளைத் தேர்ந்தெடுங்கள்
- பறவை இறைச்சி மற்றும் மற்ற இறைச்சிகளின் தோலை நீக்குவதோடு, கண்ணுக்குத் தெரிகிற எல்லா கொழுப்பையும் வெட்டியெடுத்துவிடுங்கள்.
- வாரத்துக்கு 2 அல்லது 3 தடவை கொழுப்புமிக்க மீனை உண்ணுங்கள் (சால்மன், சார்டைன், ட்யூனா, மக்கேரல்)
- சமையலில் எண்ணெய்யைக் குறைவாகப் பயன்படுத்துங்கள். ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை இரண்டு தடவைக்குமேல் மறுபடியும் பயன்படுத்தாதீர்கள்.
- கொழுப்புக் குறைவான, ஆரோக்கியமான சமையல் முறைகளைப் பின்பற்றுங்கள் (நீரில் வேக வைப்பது, ஆவியில் சமைப்பது, பேக்கிங்)
- வெண்ணெய்க்குப் பதிலாக மெல்லிய தாவர வெண்ணெய்யைப் பயன்படுத்துங்கள், அதுவும் அளவாகப் பயன்படுத்துங்கள்.
- தினமும் 2 கப் பழங்களும் 2 கப் காய்கறிகளும் சாப்பிடுவது என உறுதியெடுங்கள்.
வெளியே சாப்பிடுவது
- வறுத்த நூடுல்ஸுக்குப் பதிலாக சூப் நூடுல்ஸை சாப்பிடுங்கள் (சூப் முழுக்க நீங்களே சாப்பிடாதீர்கள்)
- வறுத்த உணவுகளை வாரத்துக்கு இரண்டு தடவைக்குமேல் சாப்பிடாதீர்கள்
- எண்ணெய் குறைவாக உள்ள உணவுகளைக் கேளுங்கள், கிரேவியைக் கொஞ்சமாகத் தர சொல்லுங்கள்
- அதிக கொழுப்புள்ள பேக்கரி சாதனங்களைக் குறைவாக சாப்பிடுங்கள் (பேஸ்ட்ரீஸ், குக்கீஸ் மற்றும் கேக்ஸ்)
- வாங்கும் உணவுப் பொருட்களின் சேர்வைப் பட்டியலை வாசியுங்கள். ஹைட்ரோஜீனேட்டட் அல்லது பாதி ஹைட்ரோஜீனேட்டட் செய்யப்பட்ட கொழுப்புகள்/எண்ணெய்கள்/மிருகக் கொழுப்புகள் ஆகியவை அடங்கியுள்ள பொருட்களைத் தவிர்த்துவிடுங்கள்
- சத்து விவரப் பட்டியலை வாசித்துப் பார்த்து, மொத்த கொழுப்பு, நிறைவுற்ற கொழுப்பு, டிரான்ஸ் கொழுப்பு ஆகியவை குறைவாக உள்ள பொருட்களைத் தேர்ந்தெடுங்கள்.
- ஆரோக்கிய தெரிவு சின்னம் இருக்கிற பொருட்களை வாங்குங்கள்.
வாழ்க்கை முறை
- வாரத்தில் குறைந்தது 2.5 மணிநேரமாவது உடல்சார்ந்த செயல்களில் ஈடுபடுங்கள்.
- உடல் எடையை ஆரோக்கியமான எடை வரம்புக்குள் வைத்திருங்கள் (சரியான BMI: 18.5 முதல் 22.9 கிகி/மீ2 )
- புகை பிடிக்காதீர்கள்
- மது அருந்துவதைக் குறையுங்கள் (ஆண்கள்: 2 ஸ்டாண்டர்டு அளவு; பெண்கள்: 1 ஸ்டாண்டர்டு அளவு)
மருந்துகள்
- மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுக்க மறக்காதீர்கள்.
*மேலேயுள்ள தகவல்களும் பரிந்துரைகளும் பொதுவான குறிப்புகள்தான். ஒரு தனி நபருக்குக் கொடுக்கப்பட்ட அறிவுரையாக எடுக்கக் கூடாது. உடல்நல தீர்மானங்கள் எடுப்பதற்கு முன்பு உங்கள் மருத்துவரையோ மருத்துவ ஆலோசகரையோ பாருங்கள்.