சிகிச்சை
- முகப்பு
- >
- பலவகை சிகிச்சை முறைகள்
- >
- ஹீமோடையாலிஸிஸ் என்றால் என்ன?
ஹீமோடையாலிஸிஸ் என்றால் என்ன?
ஹீமோடையாலிஸிஸ் என்பது ஒரு டையாலிஸிஸ் இயந்திரத்தின் உதவியோடு இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களையும் கூடுதலான உப்பையும், திரவங்களையும் நீக்கி இரத்தத்தைச் சுத்தப்படுத்துகிற ஒரு வழிமுறையாகும். பொட்டாஸியம், சோடியம், குளோரைடு போன்ற ரசாயன பொருட்களின் சமநிலையைக் காத்துக்கொள்ள இது உதவுகிறது.

பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகள்
டையாலிஸிஸ் துவங்கும் முன்பு
டையாலிஸிஸ் துவங்கும் முன்பு, இரத்த நாள நுழைவுக்குள்ளே இரண்டு ஊசிகள் செலுத்தப்படுகின்றன. ஒன்று இரத்தத்தை எடுப்பதற்கும் மற்றொன்று சுத்திகரிக்கப்பட்ட இரத்தத்தை உடலுக்குள் திருப்பி அனுப்புவதற்கும் உதவுகிறது.
நோயாளி தனது புயத்திலுள்ள நரம்பு வழியாக டையாலிஸிஸ் இயந்திரத்துடன் (குழாய் மூலம்) இணைக்கப்படுகிறார். பின்பு அவரது உடலிலுள்ள இரத்தம் நுண்ணிய மயிரிழை நாளங்கள் கொண்ட ஒரு பிரத்யேக வடிகட்டிக்கு (டையாலைஸர்) பம்ப் செய்யப்படுகிறது.

டையாலிஸிஸ் செய்யப்படும்போது
இரத்தம் தொடர்ச்சியாக பம்ப் செய்யப்பட்டு டையாலைஸர் வழியாகப் போகிறது. இதனால், அதிலுள்ள கழிவுப்பொருட்களும் கூடுதல் நீரும் அகற்றப்படுகின்றன.
இரத்தத்திலுள்ள கழிவுப்பொருட்கள் இந்த நுண்ணிய மயிரிழை நாளங்கள் முழுவதும் பரவிவிடுவதால், இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. பின்பு சுத்திகரிக்கப்பட்ட இரத்தம் பெரிய குழாய்களின் வழியாக நோயாளியின் உடலுக்குள் மீண்டும் செலுத்தப்படுகிறது

டையாலிஸிஸ் செய்ய வேண்டிய இடைவெளி
டையாலிஸிஸ் மையத்தில், ஹீமோடையாலிஸிஸ் வாரத்தில் மூன்று தடவை செய்யப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இதற்குக் கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் எடுக்கும். நோயாளியின் உடல் அளவு மற்றும் மருத்துவ நிலையைப் பொருத்து இது அமைகிறது.
என்கேஎப்-யில் நோயாளிகள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என்ற கணக்கில் டையாலிஸிஸ் நாளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதாவது, திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களா அல்லது செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை நாட்களா என்பதைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதுபோல், டையாலிஸிஸை காலையிலா, மதியத்திலா, மாலையிலா செய்ய வேண்டும் என்பதையும் தீர்மானிக்கிறார்கள்.