Menu

சிறுநீரக செயலிழப்பு

பொதுவான சிறுநீரக நோய்கள்

நீரிழிவு நெப்ரோபதி

நீரிழிவு நெப்ரோபதி என்பது நீரிழிவு சிறுநீரக நோய் என்றும் அழைக்கப்படுகிறது. இது நீரிழிவைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்காத நோயாளிகளுக்கு பொதுவாக வரும் நோய். ஒருவருடைய உடல் இன்சுலினை பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்தாதபோது அல்லது இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாதபோது ஏற்படுகிற நிலையே நீரிழிவு நோய். உடலில் இன்சுலின் அளவு குறையும்போது மற்றும்/அல்லது உடல் இன்சுலினை எதிர்க்கும்போது, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இது சிறுநீரகத்திலுள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது. ஏனென்றால், இரத்தத்தை வடிகட்ட சிறுநீர்க்கலங்கள் மிகக் கடினமாக வேலை செய்ய வேண்டியதாகிறது. காலப் போக்கில், அவை பழுதடைந்து வடிகட்டும் திறனை இழக்கின்றன.

சிங்கப்பூரில் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதற்கான முக்கியக் காரணம் நீரிழிவு நோயே. 67% புதிய நோயாளிகள் வர இதுவே காரணம். சிங்கப்பூரில் தற்போது 400,000 நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். அதிர்ச்சிகரமாக, இந்த எண்ணிக்கை 2050-க்குள் 1 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகிலேயே, நீரிழிவு நெப்ரோபதியில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. 3-ல் 2 நோயாளிகளுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட இதுவே காரணம். 3-ல் ஒருவர் தனது வாழ்நாளில் நீரிழிவு நோயைப் பெறலாம். அதில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்களுடைய நிலையைக் குறித்து அறியாமலும் அதனால் அதற்குரிய சிகிச்சை எடுக்காமலும் இருப்பா்.

முதலாம் மற்றும் இரண்டாம் வகை நீரீழிவு நோயாளிகளுக்கு நீரிழிவு நெப்ரோபதி வருகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவது நீரிழிவு நெப்ரோபதிக்கான மிக முக்கிய அறிகுறி. நீரிழிவு நெப்ரோபதி உள்ளவருக்கு இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் வராவிட்டால், இந்த நோய் முற்றி CKD 5 அல்லது சிறுநீரக செயலிழப்பு விரைவாக வந்துவிடும். நீரிழிவு நெப்ரோபதி குடும்ப வரலாறு உள்ளவர்கள் இந்த நிலையைப் பெறுவதற்கு அதிக அபாயம் உள்ளது.

அடையாளங்களும் அறிகுறிகளும்:

உடல் மந்தம்

கால்களில் வீக்கம்

அரிப்பு

குமட்டல் மற்றும்/அல்லது வாந்தி

சிறுநீர் நுரையுடன்

எடை குறைதல்

ஹைபர்டென்ஷிவ் நெப்ரோஸ்க்ளிரோசிஸ்

இரத்தம் ஓட்டம் இரத்தக் குழாய்களுக்குள்ளும் இருதயத்துக்குள்ளும் வேகமாகப் பாய்வதால் இந்த இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு நபர் ஓய்வெடுக்கும்போது இரத்த அழுத்தம் 140/90mmHg என்ற கணக்கிலிருந்து விடாமல் அதிகரித்தால் ஏற்படுவதே ஹைபர் டென்ஷன் அல்லது உயர் இரத்த அழுத்தம். இரத்தத்தில் அதிகளவு திரவம் இருந்தால், இரத்தக் குழாய்கள் சுருங்கியோ விறைப்பாகவோ இருந்தால் அல்லது அதில் அடைப்பு இருந்தால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகங்களிலுள்ள இரத்தக் குழாய்களை சேதப்படுத்தி, அவற்றின் செயல்பாட்டுத் திறனைக் குறைக்கிறது. இதன் காரணமாக, அவற்றால் உடலிலிருந்து கழிவுகளையும் கூடுதல் திரவங்களையும் வெளியேற்ற முடிவதில்லை. இரத்தக் குழாய்களில் கூடுதல் திரவம் இருந்தால் இரத்த அழுத்தம் இன்னும் அதிகரிக்கும். இப்படி ஒரு தீய சுழற்சி உண்டாகி, சிறுநீரகங்கள் பழுதடைகின்றன.

4-ல் 1 சிங்கப்பூர்வாசிகளுக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது. பொதுவாக உயர் இரத்த அழுத்தத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்: முதன்மை உயர் இரத்த அழுத்தம் (உயர் இரத்த அழுத்தம் உள்ள 95% பேருக்கும் இதுவே உள்ளது) உள்ள நபருக்கு மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களால் உயர் இரத்த அழுத்தம் வருகிறது. இரண்டாம் உயர் இரத்த அழுத்தம் (மொத்தம் 5%) உள்ள நபருக்கு சிறுநீரக நோய், நாளமில்லா சுரப்பி கோளாறு, உட்கொண்ட மருந்துகள் என வெளிப்படையான காரணங்கள் இருக்கும்.

இரத்த அழுத்தத்தைச் சீராக வைப்பதில் சிறுநீரகங்களுக்குப் பெரும் பங்கு உள்ளது. சிறுநீரக நோய், சிறுநீரகங்கள் செயலிழந்து போகுமளவுக்கு அதன் செயல்பாட்டை பாதிக்கலாம். இதனால், இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். அதேபோல், உயர் இரத்த அழுத்தம் சிறுநீரக செயலிழப்புக்கு வழிநடத்தலாம் அல்லது உடலிலுள்ள சிறுநீரக நோய்கள் மோசமடையச் செய்யலாம். கட்டுப்படுத்தப்படாவிட்டால், சிறுநீரக செயலிழப்பு அதிவிரைவில் ஏற்படும்.

அடையாளங்களும் அறிகுறிகளும்:

தலைவலி

தலைசுற்றல்

கழுத்து வலி

உடல் மந்தம்

குமட்டல் மற்றும் வாந்தி•

முடிச்சச்சிறுநீரகவழற்சி

முடிச்சச்சிறுநீரகவழற்சி என்பது சிறுநீரகத்திலுள்ள நுண்ணிய வடிகட்டிகளான வடிமுடிச்சுகள் வீங்கிவிடும் ஒரு நிலையாகும். இதற்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், சிறுநீரகங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படும், தங்களது வடிகட்டும் திறனை முழுமையாக இழந்துவிடும். நீரிழிவு நெப்ரோபதிக்கு அடுத்து, சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதற்கான இரண்டாவது முக்கியக் காரணம் இதுவே.

ஆட்டோ இம்யூன் நோய்கள்

  • லூபஸ்: இந்த ஆட்டோ இம்யூன் நோய் சிறுநீரகத்திலும் உடலின் மற்ற பாகங்களிலும் நாள்பட்ட வீக்கத்தை ஏற்படுத்தலாம்
  • (IgA) நெப்ரோபதி: IgA என்பது தொற்றுக்களை எதிர்ப்பதற்கு உற்பத்தி செய்யப்படும் நோய் எதிர்ப்புப்பொருளாகும். IgA புரதங்கள் நம் சிறுநீரகங்களில் அளவுக்கு அதிகமாகத் தங்கிவிட்டால், அதன் வடிகட்டிகள் வீங்கிவிடும், அதன் செயல்பாட்டுத் திறனும் பாதிக்கப்படும்.
  • குட் பாஸ்டர்ஸ் சிண்ட்ரோம்: இது மிக அரிதாக வரும் ஆட்டோ இம்யூன் நோய் ஆகும். இதனால், நம் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் தவறுதலாக நம் நுரையீரலையும் சிறுநீரகங்களையுமே தாக்கிவிடும்.

தொற்றுநோய் காரணங்கள்

ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியாவால் ஏற்படும் தொண்டை அழற்சி அல்லது தோல் தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டிருந்தால், அது கடும் முடிச்சச்சிறுநீரகவழற்சியை உடனடியாக ஏற்படுத்திவிடலாம்.

பொதுவாக, தொற்றுநோய்களை எதிர்க்க நம் உடல் நோய் எதிர்ப்புப்பொருட்களை உற்பத்தி செய்கிறது. தொற்றுநோய்களுக்குச் சிகிச்சை அளிக்காமல் விட்டிருந்தால், நோய் எதிர்ப்புப்பொருட்களை அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்ய நம் உடல் தூண்டப்படலாம். இவை சிறுநீரக வடிகட்டிகளில் தங்கிவிடும்போது, வீக்கம் ஏற்பட்டு முடிச்சச்சிறுநீரகவழற்சி உண்டாகலாம்.

அடையாளங்களும் அறிகுறிகளும்:

சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல்

சிறுநீர் நுரையுடன் (புரதம் வெளியேறுதல்)

அடர் அல்லது இளஞ்சிவப்பு நிறமுள்ள சிறுநீர்

சிறுநீர் வெளியேறுவது குறைவது

வீக்கம்

குமட்டல் மற்றும் வாந்தி

பாலிஸிஸ்டிக் சிறுநீரக நோய்

வயது முதிர்ந்தவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு வருவதற்கான மரபணு சார்ந்த மிக முக்கிய காரணம் பாலிஸிஸ்டிக் சிறுநீரக நோய் (PKD) ஆகும். இந்த மரபணு நிலையால், சிறுநீர்க்கலங்களிலிருந்து நீர்க்கட்டிகள் உருவாகின்றன. நீர்க்கட்டிகள் என்பது திரவம் நிறைந்த அசாதாரண பைகள் ஆகும். படிப்படியாக, இயல்பான சிறுநீரக திசுக்களுக்குப் பதிலாக இந்த நீர்க்கட்டிகள் வளருவதால், அந்த நிலையிலுள்ள நபருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது.

அடையாளங்களும் அறிகுறிகளும்:

அடிவயிற்றின் பக்கவாட்டிலும் முதுகிலும் லேசான வலி

சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல்

சிறுநீர்ப் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்

உயர் இரத்த அழுத்தம் (ஹைபர் டென்ஷன்)

மேல் வயிற்றில் வலி (கல்லீரல் மற்றும் கணையத்தில் நீர்க்கட்டிகள்)

சிறுநீரக கற்கள்

சிறுநீரக கற்கள் என்பது வலிமிகுந்த சிறுநீரகக் கோளாறு ஆகும். ஆரம்பத்தில் இவை சிறுநீரிலிருந்து தேங்கிவிடும் உப்பு அல்லது ரசாயானப் படிகங்களாக உள்ளன. ஆரோக்கியமான நபரில், சிறுநீரில் உள்ள பொருட்கள் இயல்பாகவே இந்தப் படிகமாக்கலைத் தடுக்கின்றன. ஆனால், இந்த நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இத்தகைய தடுப்புப் பொருட்கள் பயனளிப்பதில்லை. பொதுவாக, இந்தச் சிறிய படிகங்கள் எந்தப் பிரச்சினையும் உண்டாக்காமல் சிறுநீருடன் சேர்ந்து வெளியேறிவிடுகின்றன. சிறுநீரக கற்களில் பல்வேறு வகை உப்புக்கள் உள்ளன – பாஸ்பேட்டுடனோ ஆக்ஸலேட்டுடனோ கலந்த கால்ஷியம்தான் இதில் மிக முக்கியமானது. நம் அன்றாட உணவில் இந்த உப்புக்கள் குறிப்பிட்ட அளவில் உள்ளன.

சிறுநீரக கல் நோய் பொதுவாக ஆண்களுக்கு பெரும்பாலும் வருகிறது. அதுவும் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருகிறது. சிறுநீரக கற்கள் உருவாவதற்கான சில காரணங்கள்:

  • தண்ணீர் மிகக் குறைந்தளவு குடிப்பது
  • மிக அதிகமாக அல்லது மிகக் குறைவாக உடற்பயிற்சி செய்வது
  • உடல் பருமன்
  • எடைக் குறைப்பு அறுவை சிகிச்சை
  • அதிக அளவு உப்பு உட்கொள்வது
  • தொற்றுநோய்கள்
  • பழச்சர்க்கரை அதிக அளவு உட்கொள்வது
  • சிறுநீரக கற்கள் உள்ள குடும்ப வரலாறு
  • குறிப்பிட்ட சில மருந்துகள் மற்றும்/அல்லது விட்டமின்களும் சப்ளிமெண்டுகளும்
  • வளர்ச்சிதை மாற்றங்களால் வருகிற கீழ்வாதம் (அதிகளவு யூரிக் அமிலம்), ஹைபர்பாராதைராடிஸிம், சிஸ்டினுரியா (மரபணு நோய்) மற்றும் ஹைபராக்ஸலூரியா (மரபணு நோய்) போன்றவை கல் உண்டாவதற்கான சில காரணங்கள் ஆகும்.
அறிகுறிகளும் அடையாளங்களும்

சிறுநீர் கழிக்கும்போது வலி

கல் சிறுநீர்ப் பாதையை அடைக்கும் அளவுக்குப் பெரிதாக இருந்தால், சிறுநீர் கழிக்க முடியாத நிலை ஏற்படும்

சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல்

கல் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இடத்தில் கடுமையான வலி

சிறுநீர்ப் பாதையில் தொற்று

இது ஒரு சிறுநீரக நோய் அல்ல, சிறுநீர்ப் பாதையில் வருகிற நோய். சிறுநீரகங்களில் தொற்று (பைலோனெப்ரிஸ்) ஏற்படுவதற்கு இது வழிவகுக்கலாம், சிகிச்சை எடுக்காவிட்டால் நிரந்தரமாக சிறுநீரகங்களை சேதப்படுத்தலாம். மிகப் பரவலாக உள்ள தொற்று நோய்களில் இது இரண்டாவதாகும் – மேல் சுவாசக்குழாய் தொற்றுநோய் (சாதாரண இருமல் மற்றும் சளி) முதல் இடத்திலும் இது இரண்டாம் இடத்திலும் உள்ளது. பெண்களில், சிறுநீர்ப்பைக்குழாய் சிறிதாகவும் யோனியின் துளைக்கு மிக அருகிலும் இருப்பதால் சிறுநீர்ப் பாதைத் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

நுண்ணுயிரிகள் (பொதுவாக குடலிலிருந்து வரும் பாக்டீரியா) சிறுநீர்ப்பைக்குழாய்களில் ஒட்டிக்கொண்டு பெருகத் துவங்கும்போது இந்தத் தொற்று ஏற்படுகிறது. கீழ் சிறுநீர்ப் பாதையிலேயே (சிறுநீர்ப்பைக்குழாய் மற்றும் சிறுநீர்ப் பை) இவை தங்கிவிடலாம் அல்லது மேல்நோக்கி கடந்து சிறுநீரகங்களையும் பாதிக்கலாம். உடலுறவால் கடத்தப்படும் உயிரிகளும் இந்த நிலைக்கு காரணமாகலாம். சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்: நீரிழிவு நோய் உள்ளவர்கள், சிறுநீர் கதீட்டர் தேவைப்படும் நிலை உள்ளவர்கள், சிறுநீர்ப் பாதையில் கோளாறு உள்ளவர்கள், (புரோஸ்டேட் சுரப்பி பெரிதாகுதல் அல்லது கல்) காரணமாக சிறுநீர் கழிப்பதற்கு சிரமப்படுபவர்கள். பொதுவாக, கர்ப்பிணி பெண்களுக்கும் சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படுகிறது.

அறிகுறிகளும் அடையாளங்களும்

சிறுநீர் கழிக்கும்போது வலி

சூடாகவும் துர்நாற்றத்துடனும் சிறுநீர் வெளியேறுதல்

சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல்

குளிர்நடுக்கத்துடன் காய்ச்சல்

அடிவயிற்றில் வலி

சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு அடிக்கடி உண்டாகுதல்

குமட்டல் மற்றும்/அல்லது வாந்தி

முதுகு வலி (பைலோனெப்ரிஸ்)

வலி நிவாரணி நெப்ரோபதி

வலி நிவாரணிகள் என்பது பலவித (எப்பேர்ப்பட்ட) வலிகளிலிருந்தும் விடுபடுவதற்காக உட்கொள்ளப்படுகிற மிகச் சாதாரண மருந்துகளாகும். இவை மருத்துவர் பரிந்துரைத்ததாகவோ மருத்துவ குறிப்பு இல்லாமல் நேரடியாக மருந்து கடைகளிலிருந்து வாங்கியதாகவோ இருக்கலாம். சரியாக உட்கொள்ளும்போது அவற்றால் தீங்கு வருவதில்லை என்றாலும் அளவுக்குமீறி உட்கொண்டால் சிறுநீரகங்களைப் பாதிக்கலாம். மருந்துகள் சரியாக உட்கொண்ட போதிலும்கூட சிலருக்கு கடுமையான சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்ட அனுபவங்களும் உள்ளன.

வலி நிவாரணி நெப்ரோபதி என்பது நாள்பட்ட சிறுநீரக நோய். ஒருநபர் நீண்ட காலத்துக்கு (வருடக்கணக்காக) வலிநிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்வதால் இது உண்டாகிறது. கீழ்வாதம், தலைவலி போன்ற ஏதோவொரு நாள்பட்ட வலி நோய்க்குறி உள்ளவர்களுக்கே தொடர்ந்து வலி நிவாரணிகளை உட்கொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது. எல்லா வகை வலி நிவாரணிகளும் வலி நிவாரணி நெப்ரோபதியை ஏற்படுத்துவதில்லை. வலி நிவாரணி நெப்ரோபதியால் சிறுநீரக செயலிழப்பு உண்டாகலாம், இதனால் டையாலிஸிஸோ உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையோ செய்ய வேண்டியதாகலாம்.

அறிகுறிகளும் அடையாளங்களும்

சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல்

சிறுநீர் நுரையுடன் (புரதம் வெளியேறுதல் )

குமட்டல் மற்றும் வாந்தி

பசியின்மை

உடல் மந்தம்

வீக்கம்

error: Content is protected !!
K-Buddy
wpChatIcon
Scroll to Top